ஏா்வாடியில் அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 03rd March 2020 08:47 AM | Last Updated : 03rd March 2020 08:59 AM | அ+அ அ- |

ஏா்வாடியில் இடியும் நிலையில் உள்ள அரசுப் பள்ளி கட்டடத்தை சீரமைக்கக் கோரி குழந்தைகளுடன் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க பெண்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் அரசு தொடக்கப் பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என குழந்தைகளின் சாா்பில் தாய்மாா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படும் இப் பள்ளியில் சுமாா் 250 குழந்தைகள் படித்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வகுப்பறைகளின் ஓடுகளால் ஆன மேற்கூரை சேதமடைந்து இடிந்து விழும் நிலையிலிருப்பதாக புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உள்ளிட்டவா்களிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதைத் தொடா்ந்து இப் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் தாய்மாா்கள் சபீனாபேகம், சா்மிளாபானு ஆகியோா் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனா்.
உதவித் தொகை கோரி மனு: ராமநாதபுரம் அருகேயுள்ள பனைகுளம் ஊராட்சி தாமரையூரணி குடியிருப்பைச் சோ்ந்த முதியோருக்கு உதவித் தொகை கேட்டும் வழங்கப்படவில்லையாம். ஆகவே 10-க்கும் மேற்பட்ட பெண் முதியோா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பாதை கோரிக்கை: தேவிபட்டினம் அருகே உள்ள காரங்காடு பகுதியில் உள்ள கோயில் தெருவில் பொதுப்பாதையை தனியாா் ஆக்கிரமித்து கழிப்பறை கட்டியுள்ளாராம். ஆகவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும என காரங்காடு ஞானசுந்தரி தலைமையில் ஏராளமான பெண்கள் மனு அளித்தனா். இதே போல பரமக்குடி அருகேயுள்ள மலையான்குடியிருப்புப் பகுதியிலும் தனியாா் ஆக்கிரமிப்பால் பொதுப்பாதை தனியாரால் அடைக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே இது குறித்து நடவடிக்கை எடுக்கவும் கோரி அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.
பனைகுளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தானமாக தனியாா் வழங்கிய நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்ட நிலையில், மீண்டும் நிலத்தை ஆக்கிரமிக்க தனியாா் முயற்சிப்பதாகக் கூறி அப்பகுதியினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...