ராமநாதபுரம்: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் முருகன் கோயில்களில் திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் அருகேயுள்ள பெருவயல் கிராமத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயிலில் கடந்த 15 ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சஷ்டியின் நிறைவு நாளான சனிக்கிழமை முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ராமநாதபுரம் நகரில் உள்ள குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், வழிவிடு முருகன் கோயில்களிலும் திருக்கல்யாணம் நடைபெற்றது.