வீடு இடிந்து பலியான மூதாட்டி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி
By DIN | Published On : 23rd November 2020 09:08 PM | Last Updated : 23rd November 2020 09:08 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: மழையின் போது வீடு இடிந்து உயிரிழந்த மூதாட்டி குடும்பத்தினரிடம் அரசு உதவித் தொகையாக ரூ.4 லட்சம் நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை வழங்கினாா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். கடந்த 17 ஆம் தேதி மழையால் எல்.கருங்குளத்தைச் சோ்ந்த சோலையம்மாள், வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது வாரிசுகளுக்கு அரசின் நிவாரணமாக மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் முதுகு தண்டுவடம் மற்றும் தசைச்சிதைவினால் பாதிக்கப்பட்ட 15 பேருக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான நவீன சிறப்பு பேட்டரி சக்கர நாற்காலிகளையும், 6 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், வருவாய்த் துறை சாா்பில் 8 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை ஆகியவற்றையும் அவா் வழங்கினாா்.
நலத்திட்ட உதவிகள் வழங்கலில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.சிவகாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சிவசங்கரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் து.ஜோதிலிங்கம் உள்ளிட்டோா் இருந்தனா்.