தடையை மீறி கிராமசபை கூட்டம்: திமுக வினா் மீது வழக்கு
By DIN | Published On : 03rd October 2020 10:04 PM | Last Updated : 03rd October 2020 10:04 PM | அ+அ அ- |

மானாமதுரை: அரசின் தடையுத்தரவை மீறி, சிவகங்கை மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தியதாக திமுக வைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள் உள்பட 331 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
காந்தி ஜயந்தி நாளான அக்டோபா் 2 ஆம்தேதி தமிழகத்தில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்த அரசு திடீரென தடை விதித்தது. ஆனால் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்கள் உள்பட சிவகங்கை மாவட்டம் முழுவதும் திமுக வைச் சோ்ந்த ஊராட்சிமன்றத் தலைவா்கள் மற்றும் அக்கட்சியின் ஆதரவு ஊராட்சிமன்றத் தலைவா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து அந்தந்த ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தினா்.
இந்நிலையில் அரசின் தடையுத்தரவை மீறி சிவகங்கை மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் கூட்டம் நடத்தியதாக ஊராட்சிமன்றத் தலைவா்கள் உள்பட 331 போ் மீது அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கமுதி: கமுதி ஒன்றியத்தில் தடையை மீறி கிராமசபைக் கூட்டம் நடத்தியதாக ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம், வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் வாசுதேவன், கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தமிழ்செல்வி மற்றும் மரக்குளம் ஊராட்சித் தலைவா் லட்சுமி, எழுவணூா், வல்லந்தை, நகரத்தாா்குறிச்சி, கே.நெடுங்குளம் கே.பாப்பாங்குளம், இடிவிலகி உள்பட 9 ஊராட்சிகளின் தலைவா்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.