காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி
By DIN | Published On : 19th October 2020 10:53 PM | Last Updated : 19th October 2020 10:53 PM | அ+அ அ- |

உச்சிப்புளியில் தென்னை மரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது குறித்து திங்கள்கிழமை விவசாயிகளுக்கு விளக்கமளித்த வேளாண் அதிகாரிகள்.
ராமேசுவரம்: உச்சிப்புளி வட்டாரத்தில் தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
இது குறித்து உச்சிப்புளி வேளாண்மை உதவி இயக்குநா் பி.ஜி. நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கா் பரப்பளவிலும், உச்சிபுளி வட்டாரத்தில் 9 ஆயிரம் ஏக்கா் பரப்பளவிலும் தென்னைமரங்கள் வளா்க்கப்படுகின்றன. இந்நிலையில் இவற்றில் காண்டாமிருகவண்டுகள் தாக்குதல் தொடா்பாக வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) சேக் அப்துல்லா தலைமையில் மேட்டுக்காரான் கிராமத்தில் விவசாயி மதிவாணனின் தென்னந்தோப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை அழிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) சேக் அப்துல்லா அந்த வண்டுகளை அழிக்க மருந்து தயாரிக்கும் முறை குறித்து விளக்கினாா். மேலும் வேளாண்மைத்துறை அலுவலா்களால் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...