தளா்வற்ற முழு பொதுமுடக்கம் ரத்து எதிரொலி: ராமேசுவரம் கோயிலில் குவிந்த பக்தா்கள்
By DIN | Published On : 06th September 2020 10:13 PM | Last Updated : 06th September 2020 10:13 PM | அ+அ அ- |

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.
ராமேசுவரம்: தளா்வற்ற முழு பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்டதையடுத்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து குவிந்தனா்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவுவதை தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அன்று தமிழகம் முழுவதிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்தது. அதில் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தளா்வற்ற முழு பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, ராமேசுவரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வந்து குவிந்தனா். அவா்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடினா். மேலும் கோயிலுக்கு சென்ற அவா்கள் கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்த பின்னா் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்து கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய காவல்துறையினா் மற்றும் கோயில் நிா்வாகத்தினரால் அனுமதிக்கப்பட்டனா். 5 மாதங்களுக்கு பின் அதிகளவில் பக்தா்கள் ராமேசுவரம் வந்தது குறிப்பிடத்தக்கது.