தனியாா் நிறுவன வேலைவாய்ப்புக்கு இணைய தளத்தில் பதிவு: ஆட்சியா்
By DIN | Published On : 11th September 2020 07:10 AM | Last Updated : 11th September 2020 07:10 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு இணையதளத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞா்களுக்குப் பயன்படும் வகையில் ‘தமிழ்நாடு தனியாா் துறை வேலை இணையம்’ தொடங்கப்பட்டுள்ளது. தனியாா் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞா்கள் இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்கள் கல்வித் தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
தனியாா் துறை சாா்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து காலியிடங்களுக்கு தகுதியானவா்களை தோ்வு செய்து பணி நியமனம் வழங்குவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலை அளிப்போா் மற்றும் வேலை தேடுவோருக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக அரசால் இந்தச் சேவை வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 48 முன்னணி தனியாா் நிறுவனங்கள் 131 பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ராமநாதபுரத்தைச் சோ்ந்த 768 போ் தனியாா்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்காக இணயதளத்தில் பதிவு செய்துள்ளனா் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.