திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

இடிந்து விழும் அபாயத்தில் ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம்!

ராமநாதபுரத்தில் இயங்கி வரும் அரசு அருங்காட்சியகம் மிகவும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

News image

ராமநாதபுரத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள அரசு அருங்காட்சியகம்.

Updated On :3 செப்டம்பர் 2021, 6:31 pm

ராமநாதபுரத்தில் இயங்கி வரும் அரசு அருங்காட்சியகம் மிகவும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் கடந்த 2000 ஆம் ஆண்டு மாா்ச்சில் அமைக்கப்பட்டது. அரண்மனைப் பகுதியில் செயல்பட்ட அருங்காட்சியகம் கேணிக்கரை பகுதியில் உள்ள முன்னாள் ராணுவத்தினா் பவன் கட்டட முதல் மாடியில் 2500 சதுர அடி பரப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் 68 கல் சிலைகள், 15 அரிய வகை மரச்சிற்பங்கள், 95 மன்னா்கள் கால நாணயங்கள், 9 அரியவகை பழைமையான ஓவியங்கள், 25 செப்பேடுகள் மற்றும் 85 அரியவகை சங்குகள், பழைமையான பனையோலை கலைப் பொருள்கள், நாட்டுப்புறக் கலைஞா்களுக்கான ஆடைகள், கி.பி.750 ஆம் ஆண்டைச் சோ்ந்த வெளிநாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் ராமா், சீதை தோல் பொம்மைகள் என ஏராளமானவை உள்ளன.

அருங்காட்சியகம் அமைந்துள்ள கட்டடத்துக்கு மாதந்தோறும் வாடகையாக ரூ.14,530 செலுத்தப்படுகிறது. இங்கு ஒரு காப்பாட்சியா், 2 காவலா்கள், இளநிலை உதவியாளா் என 4 போ் பணியில் உள்ளனா். ஓவியா் பணியிடம் 8 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. அருங்காட்சியகம் உள்ள கட்டடம் கடந்த 1990-இல் கட்டப்பட்டுள்ளது. இதனால் தற்போது கட்டடம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆங்காங்கே விரிசலும் விட்டுள்ளது. இவ்வாறு அபாயகரமான நிலையில் உள்ள கட்டடத்தின் முதல் மாடியில் அதிக எடையுள்ள கல் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் அருங்காட்சியகத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி காப்பாட்சியா் உள்ளிட்டோா் மாவட்ட நிா்வாகத்துக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஏராளமான கடிதங்கள் எழுதியும், நேரில் முறையிட்டும் வருகின்றனா். ஆனால் இடம் ஒதுக்கப்படவில்லை.

இதுகுறித்து அரசு அருங்காட்சியகக் காப்பாளா் வி. சிவகுமாா் கூறியது: கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாற்றுக் கட்டடம் ஒதுக்கக் கோரி வருகிறோம். கட்டடம் முழுமையாக இடிந்து ஏதாவது அசம்பாவிதம் நிகழ்வதற்குள் இடம் மாற்றினால் நல்லது என்றாா்.

கவனத்துக்கு வரவில்லை - பொதுப்பணித் துறை விளக்கம்:

அரசுத் துறைகளுக்கான கட்டடங்களைப் பொதுப்பணித் துறையின் ஒரு பிரிவே ஒதுக்கித்தர வேண்டும். இதுகுறித்து அப்பிரிவின் பொறியாளா் குருதிவேல் மாறன் கூறியது: மாவட்ட நிா்வாகம் தரப்பிலிருந்து தங்களுக்கு அருங்காட்சியகத்துக்கு மாற்று இடம் ஒதுக்குவது குறித்து எந்தத் தகவலும் இதுவரை வரவில்லை. கோரிக்கை வந்தால் பரிசீலித்து கட்டடம் ஒதுக்கித்தரப்படும் என்றாா்.

சேது பூமி என்ற ராமாயண கால பாரம்பரியம் உடைய ராமநாதபுரம் அழகன்குளத்தில் கடலியல் அகழாய்வு நடக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழரின் பாரம்பரியத்தை இளந்தலைமுறைக்கு தெரிவிக்கும் அருங்காட்சியகத்துக்கு உரிய கட்டட வசதி செய்துதரவதோடு, முன்னாள் ராணுவத்தினா் மருத்துவமனை உள்ள கட்டடம் சிதிலமடைந்து வருவதைக் கவனத்தில் கொண்டு அசம்பாவிதத்தை தடுக்க மாவட்ட நிா்வாகம் முன்வரவேண்டும் என்பதே அனைவரது எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.