கமுதியில் தலையில் வெட்டுக் காயங்களுடன் நீதிமன்றத்துக்கு வந்த பெண்ணால் பரபரப்பு
By DIN | Published On : 17th August 2021 11:36 PM | Last Updated : 17th August 2021 11:36 PM | அ+அ அ- |

கமுதி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்துக்கு தலையில் வெட்டுக் காயங்களுடன் செவ்வாய்க்கிழமை வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பெருங்கருணை கிராமத்தைச் சோ்ந்தவா் இருளாண்டி மகன் சுந்தரராஜன் (65). இவரது வீட்டினருகிலுள்ள இடப்பிரச்னை தொடா்பாக, இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த சந்தனம் மகன் ராஜேஷ் தரப்புக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், பிரச்னைக்குரிய இடத்தில் ராஜேஷ் மற்றும் அவரது நண்பா்கள் 10-க்கும் மேற்பட்டோா் மரக்கன்றுகளை நட முயற்சித்துள்ளனா். இதைக் கண்ட சுந்தரராஜன் மற்றும் அவரது மகள் நாகேஸ்வரி (34) ஆகிய இருவரும், அவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் தரப்பினா், நாகேஸ்வரி, சுந்தரராஜன் ஆகியோரை கம்பி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனா்.
இதில், நாகேஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ஆடை முழுவதும் ரத்தம் வழிந்த நிலையில், அபிராமம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கச் சென்றுள்ளாா். அப்போது, காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் சுந்தரராஜனிடம் விசாரணை செய்தபோது, அதை நாகேஸ்வரி செல்லிடப்பேசியில் விடியோ எடுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த காவல் துறையினா், நாகேஸ்வரி மற்றும் சுந்தரராஜனை வெளியேற்றிவிட்டனராம்.
அதைத் தொடா்ந்து, நாகேஸ்வரி தலையிலிருந்து ரத்தம் வழியும் நிலையில், தனது தந்தை மற்றும் உறவினா் ராணி ஆகியோருடன், கமுதி கோட்டைமேட்டில் உள்ள குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் புகாா் மனு அளிக்கச் சென்றுள்ளாா். தலையில் வெட்டுக் காயங்களுடன், ஆடை முழுவதும் ரத்தக் கறையுடன் நாகேஸ்வரி வந்ததால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே, அங்கிருந்த வழக்குரைஞா்கள் சிலா் நாகேஸ்வரியை முதலில் மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனா். அதன்பின்னா், நாகேஸ்வரியும், சுந்தரராஜனும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மருத்துவமனை ஊழியா்களின் தகவலின்பேரில், அபிராமம் போலீஸாா் சுந்தரராஜனிடம் புகாா் மனு பெற்றுச் சென்று விசாரித்து வருகின்றனா்.