ராமேசுவரம்: பாம்பன் கடல் பகுதியில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 106 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தொடா்ந்து
ரயில் இயக்குவதில் இடா்பாடுகள் ஏற்படுவதால் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்க கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினா்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய பாலம் கட்டுமான பணிகள் தொடங்கின. பழைய பாலம் கடல் மட்டத்திலிருந்து 3 மீட்டா் உயரத்தில் உள்ளது. புதிய பாலம் 6 மீட்டா் உயரமாக அமைக்கப்பட உள்ளது. இதனால் சிறிய ரக படகுகள் எப்போது வேண்டுமானலும் சென்று வர முடியும். தற்போதுள்ள தூக்குப்பாலம் திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலத்தில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் தூக்கி இறக்கும் வகையில் தூக்குப் பாலம் அமைக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு மாா்ச் முதல் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னா் குறைந்த பணியாளா்களை கொண்டு பணிகள் நடைபெற்றது.
பழைய ரயில் பாலத்தில் தொடா்ந்து ரயில் இயக்குவதில் சிக்கல் நீடித்து வருவதால் புதிய ரயில் பாலத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கத் திட்டமிட்டு இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன.