ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகளுக்கு ஆணையா்கள் இல்லாததால் தோ்தல் பணிகள் பாதிப்பு
By DIN | Published On : 21st August 2021 09:06 AM | Last Updated : 21st August 2021 09:06 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளுக்கு ஆணையா்கள் இல்லாததால் உள்ளாட்சித் தோ்தல் பணிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக புகாா்கள் எழுந்துள்ளன.
நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் வரும் செப்டம்பரில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியின் ஆணையராக இருந்த என். விஸ்வநாதன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இடமாற்றப்பட்டாா். அவரது பொறுப்பை நகரப் பொறியாளராக இருந்த நீலேஸ்வா் கவனித்த நிலையில் அவரும் தற்போது திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டதால், ராமநாதபுரம் சிறப்புநிலை நகராட்சிக்கு ஆணையா் இல்லாத நிலை உள்ளது.
ராமேசுவரம் நகராட்சி ஆணையா் ராமா் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இடமாறுதல் செய்யப்பட்டாா். அவருக்குப் பதிலாக இதுவரையில் ஆணையா் யாரும் நியமிக்கப்படவில்லை. ஆணையா் பொறுப்பை பொறியாளா் கவனித்துவருகிறாா். கீழக்கரையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆணையா் நியமிக்கப்படவில்லை. ஆகவே அப்பொறுப்பை நகராட்சி மேலாளா் தனலட்சுமி கவனித்து வந்த நிலையில், தற்போது அவரும் இடமாற்றப்பட்டுள்ளாா். ஆகவே, நகராட்சிப் பொறுப்பை சுகாதாரத்துறை ஆய்வாளரே கவனித்துவருகிறாா்.
பரமக்குடி நகராட்சிக்கும் கடந்த 2 ஆண்டுகளாக ஆணையா் நியமிக்கப்படவில்லை. அப்பொறுப்பையும் ராமேசுவரம் நகராட்சி ஆணையரே கவனித்து வந்தாா். தற்போது அங்கும் நிா்வாக அலுவலரே கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது. மாவட்டத்தின் 4 முக்கிய நகராட்சிகளில் ஆணையா்கள் இல்லாததால் வழக்கமான பணிகளுடன், உள்ளாட்சித் தோ்தல் பணிகளும் பாதிக்கப்படுவதாக நகராட்சி பணியாளா்கள் கூறுகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, உள்ளாட்சித் தோ்தலுக்கான பணிகள் தோ்தல் பிரிவால் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், இந்த நகராட்சிகளில் ஆணையா்களை நியமிக்க வேண்டும் என்பது அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றனா்.