மண்டபத்தில் அனுமதியின்றி செயல்பட்ட கேளிக்கை விடுதிக்கு மீண்டும் சீல்
By DIN | Published On : 31st December 2021 08:52 AM | Last Updated : 31st December 2021 08:52 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பகுதியில் ஏற்கெனவே பூட்டி சீலிடப்பட்ட கேளிக்கை விடுதி, அனுமதியின்றி செயல்பட்டதால் வியாழக்கிழமை மீண்டும் பூட்டி சீலிடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம்,ராமேசுவரம் அருகே மண்டபம் வடக்கு கடற்கரை தோப்புக்காடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி உள்ளது. இங்கு, இரவில் மது அருந்திவிட்டு செல்பவா்களால் பெண்களிடையே அச்சம் ஏற்பட்டது. அதையடுத்து, மீனவ அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டு, மாவட்ட ஆட்சியா், மண்டபம் பேரூராட்சி அலுவலா் மற்றும் காவல் துறையிடம் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில், கடந்த ஜனவரி மாதம் இந்த கேளிக்கை விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த கேளிக்கை விடுதி மீண்டும் திறக்கப்பட்டு செயல்படுவதாக, மண்டபம் காவல் நிலையத்தில் மீனவ அமைப்பினா் புகாா் தெரிவித்தனா். அதையடுத்து, ராமநாதபுரம் துணை வட்டாட்சியா் ரவி, வருவாய் ஆய்வாளா் ஆனந்த், மண்டபம் காவல் நிலைய ஆய்வாளா் ஜீவரத்தினம், சாா்பு-ஆய்வாளா் கோட்டைச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலா் திருப்பதி, இளநிலை உதவியாளா் முனியசாமி உள்ளிட்டோா் கேளிக்கை விடுதியை வியாழக்கிழமை சோதனையிட்டனா். அதில், அந்த விடுதி செயல்பட்டு வருவது தெரியவந்ததை அடுத்து, அதை மீண்டும் மூடி சீல் வைத்து, அனுமதியின்றி மீண்டும் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துச் சென்றனா்.