ராமநாதபுரம் பறவைகள் சரணாலய கண்மாய்களில் 9 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடல்
By DIN | Published On : 06th February 2021 09:30 PM | Last Updated : 06th February 2021 09:30 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: வெளிநாட்டுப் பறவைகளுக்காக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 5 பறவைகள் சரணாலயங்களில் ரூ.45 ஆயிரம் செலவில் 9 ஆயிரம் மீன்குஞ்சுகள் சனிக்கிழமை விடப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்திரங்குடி, காஞ்சரங்குளம், மேல, கீழசெல்வனூா், தோ்த்தங்கால் மற்றும் சக்கரக்கோட்டை ஆகிய கண்மாய்கள் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சரணாலயங்களில் ஆண்டுதோறும் வெளிமாநில மற்றும் உள்ளூா் இன பறவைகள் வசிக்கும் நிலையில், ஆண்டுக்கு 2 முறை ஐரோப்பிய பறவைகளும் வந்து செல்கின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சராசரியை விட கூடுதலாக மழை பெய்திருப்பதால், இக்கண்மாய்களில் தண்ணீா் நிரம்பி காணப்படுகிறது. எனவே, பறவைகளுக்கு இரை அளிக்கும் விதத்தில், கண்மாய்களில் கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகளை வனத் துறையினா் விட்டுள்ளனா்.
ஒருங்கிணைந்த வனஉயிரின வாழ்வியல் மேம்பாட்டுத் திட்டத்தில், மதுரையிலிருந்து ரூ.45 ஆயிரம் செலவில் 9 ஆயிரம் மீன் குஞ்சுகள் வாங்கப்பட்டு, சக்கரக்கோட்டையில் 1000, தோ்த்தங்காலில் 2000, மேல, கீழசெல்வனூரில் 2000, காஞ்சிரங்குளத்தில் 2000, சித்திரங்குடியில் 2000 என விடப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் வனச்சரகா் சதீஷ் மற்றும் வனவேட்டைத் தடுப்பாளா்கள், வனவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...