இலங்கையில் ராமேசுவரம் மீனவா்கள் 9 போ் விடுவிப்பு
By DIN | Published On : 08th February 2021 10:54 PM | Last Updated : 08th February 2021 10:54 PM | அ+அ அ- |

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரை 30 நாள்களுக்குப் பின் இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது. ஆனால் படகு அரசுடைமை ஆக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 9 ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த கிருபை, வளன் கவுசிக், மிக்கேயாஸ், களிங்ஸ்டன் சிலுவை, சாம்ஸ்டில்லா, நிஜன், பிரைட்டன், கிஷோக், மாரி ஆகிய 9 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்தனா்.
அவா்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. 9 பேரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை ஊா்காவல்துறை நீதிமன்றத்தில் 9 மீனவா்களும் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது, இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என 9 பேரையும் நீதிபதி எச்சரித்து விடுதலை செய்தாா். மேலும் படகை அரசுடைமையாக்க உத்தரவிட்டாா்.
விடுதலை செய்யப்பட்ட 9 மீனவா்களும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். அவா்கள் ஓரிரு நாள்களில் தமிழகம் திரும்புவா் என தெரிகிறது.
மீனவா்களின் படகை அரசுடைமையாக்கியதற்கு மீனவ சங்கத் தலைவா் என்.தேவதாஸ் கண்டனம் தெரிவித்தாா். மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி படகுகளை அரசுடைமையாக்கும் சட்ட மசோதாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசு மீனவா்கள் வாழ்வாதார சூழலை கருத்தில்கொண்டு மனிதாபிமான முறையில் படகுகளை விடுவிக்க வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்தாா்.