மீனவா்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 08th February 2021 10:56 PM | Last Updated : 08th February 2021 10:56 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே மீனவ மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் சேதுக்கரை ஊராட்சிக்குட்பட்ட மேலப்புதுக்குடியில் 80 மீனவ குடும்பங்கள் அரசு புறம்போக்கு இடங்களிலும், தேவஸ்தான இடங்களிலும் மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனா். இவா்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
உரிய ஆவணம் இன்றி வாழ்வதால் அரசின் நலத் திட்ட உதவிகள் மற்றும் வீடுகளில் மின் இணைப்பு பெறுவதற்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு மீனவ மக்களுக்கு இலவச வீட்டுமனை திட்டத்தின்கீழ் இடம் தந்து, பட்டா வழங்கி உதவ வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.