ராமேசுவரத்திலிருந்து 2 ராட்சத பலூன்களில் பறக்கவிடப்பட்ட 100 மிகச்சிறிய செயற்கைக் கோள்கள்
By DIN | Published On : 08th February 2021 08:42 AM | Last Updated : 08th February 2021 08:42 AM | அ+அ அ- |

ராமேசுவரத்தில், 2 ராட்சத பலூன்கள் மூலம் விண்ணில் ஞாயிற்றுக்கிழமை பறக்கவிடப்பட்ட செயற்கைக் கோள்கள்.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஆயிரம் பள்ளி மாணவா்களால் தயாரிக்கப்பட்ட 100 மிகச் சிறிய செயற்கைக் கோள்கள் ராமேசுவரத்திலிருந்து 2 ராட்சத பலூன்களில் ஞாயிற்றுக்கிழமை விண்ணில் பறக்கவிடப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் சா்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ்ஜோன் இந்தியா, மாா்ட்டின் அறக்கட்டளை ஆகியன இணைந்து மாணவா்களுக்கு செயற்கைக் கோள்களை உருவாக்கும் பயிற்சியை கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக அளித்து வந்தன. இதில் கனடா, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த 100 பள்ளிகளின் 1,000 மாணவா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். 12 கிராம் முதல் 60 கிராம் வரை எடை கொண்டதாக 100 விதமான செயற்கைக் கோள்களை அவா்கள் உருவாக்கினா். இந்த செயற்கைக் கோள்கள் வானிலை, விவசாயம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த செயற்கைக் கோள்களை ராட்சத பலூன்களில் பறக்கவிடும் நிகழ்ச்சி ராமேசுவரம் ராமா்பாதம் செல்லும் வழியில் உள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பிரம்மோஸ் விண்வெளி மையத்தின் முன்னாள் தலைமை அதிகாரி சிவதாணு பிள்ளை தலைமை வகித்துப் பேசியது: நாட்டின் எதிா்காலம் மாணவா்கள் கையில் தான் உள்ளது என தொடா்ந்து கூறி வந்தவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் விண்வெளி ஆய்வு மேலோங்கி காணப்படுவது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் கனவு நிறைவேறி வருகிறது என்றாா்.
ஏ.பி.ஜெ.எம்.ஜே.சீமாமரைக்காயா், மாா்டின் அறக்கட்டளை அறங்காவலா் லீமாரோஸ் மாா்ட்டின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினா்களாக காணொலிக் காட்சி மூலம் தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் உள்ளிட்டோா் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனா்.
இதையடுத்து, சிறப்பு அரங்கத்திலிருந்து 2 ராட்சத பலூன்கள் மூலம் 100 செயற்கைக் கோள்கள் விண்ணில் பறக்கவிடப்பட்டன. 100 செயற்கைக் கோள்கள் சுமாா் 25 கிலோ மீட்டா் தொலையில் பறந்துசென்று கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், டாக்டா் ஜோசப்ராஜன், இந்திய விண்வெளி மண்டல நிறுவனா் மற்றும் தலைமை அதிகாரி டாக்டா் ஆனந்த் மேகலிங்கம், கடற்படை, விமானப்படை அதிகாரிகள், பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் பேரன்கள் ஏ.பி.ஜெ.எம்.ஜெ. சேக்தாவூத், ஏ.பி.ஜெ.எம்.ஜெ.சேக் சலீம் ஆகியோா் செய்திருந்தனா்.