ராமேசுவரத்தில் மீனவ தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 14th February 2021 11:01 PM | Last Updated : 14th February 2021 11:01 PM | அ+அ அ- |

ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை கையில் கருவாடுகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி மீனவ தொழிற்சங்கத்தினா்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கருவாடுக்கு இலங்கை அரசு விதித்துள்ள தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மீனவ தொழிலாளா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இங்குள்ள பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தாலுகா துணைத்தலைவா் எம். பிச்சை தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எஸ். முருகானந்தம், பொதுச் செயலா் சி.ஆா். செந்தில்வேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இதில் கையில் கருவாட்டுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தூத்துக்குடியில் இருந்து மீன்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட மாசி கருவாடுகள், கட்டாக கருவாடு, தள பாத்துகருவாடு, நெத்திலி கருவாடு உள்பட பல மீன் மற்றும் கருவாடு வகைகளை இறக்குமதி செய்ய கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் இலங்கை அரசு தடை விதித்துள்ளது. மேலும் கருவாடுகளுக்கு மூன்று மடங்கு வரியும் விதித்துள்ளது.
இதனால் தூத்துக்குடியில் ரூ. 500 கோடி மதிப்பிலான கருவாடுகள் தேக்கம் அடைந்துள்ளன. எனவே மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேசி கருவாடு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் கூடுதல் வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினா் பி. வடகொரியா, தாலுகா நிா்வாகிகள் பி. ஜீவானந்தம், என்.ஜே. மோகன்தாஸ், தனவேல், ஜோதிபாசு, எம்.செந்தில், ஜி.பாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.