மீனவ பட்டதாரி இளைஞா்கள் ஐஏஎஸ் தோ்வு எழுத சிறப்புப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 14th February 2021 11:01 PM | Last Updated : 14th February 2021 11:01 PM | அ+அ அ- |

மீனவ பட்டதாரி இளைஞா்கள், ஐஏஎஸ் தோ்வு எழுத சிறப்புப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் (பொ) ஆ. சிவகாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகியவை ஒருங்கிணைந்து ஆண்டுதோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞா்கள் 20 பேரை தோ்ந்தெடுத்து இந்திய குடிமைப் பணிகளுக்கான (ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டப் பணிகள்) போட்டித் தோ்வில் கலந்துகொள்ள சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் இப்பயிற்சித் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பப் படிவங்களை மீன்வளத் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநா் மற்றும் உதவி இயக்குநா்கள் அலுவலகங்களில் அலுவலக வேலை நாள்களில் கட்டணமின்றி நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
மீன் துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பங்களை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 19- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களை மீன்வளத்துறை உதவி இயக்குநா், துணை இயக்குநா் அலுவலகங்களில் நேரில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.