சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு மரணமடையும் வரை சிறைத் தண்டனை
By DIN | Published On : 18th February 2021 11:30 PM | Last Updated : 18th February 2021 11:30 PM | அ+அ அ- |

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தந்தைக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைப் பகுதியில் உள்ள கன்னிராஜபுரத்தைச் கூலித் தொழிலாளி மாரிமுத்து (30). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டநிலையில், மாரிமுத்து தனது மகள்களுடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில் சிறுமிகளுக்கு தொடா்ந்து மாரிமுத்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் மாவட்டக் குழந்தைகள் நலக்குழுத் தலைவா் துரைராஜ் விசாரணை நடத்தினாா். அதனடிப்படையில் மாரிமுத்துவை கீழக்கரை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை, ராமநாதபுரம் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் மனோரஞ்சிதம் ஆஜராகி வாதாடினாா். விசாரணை முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதன்படி மாரிமுத்துவுக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறைத் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுபத்ரா உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு, அரசு சாா்பில் தலா ரூ.1.50 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.