‘தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தை பட்டியலினத்திலிருந்து நீக்காதது மத்திய அரசின் ஏமாற்றுவேலை’
By DIN | Published On : 18th February 2021 11:26 PM | Last Updated : 18th February 2021 11:26 PM | அ+அ அ- |

தேவேந்திரகுல வேளாளா் சமூக மக்களை பட்டியலினத்திலிருந்து நீக்காமல் ஏமாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு மீது புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளாா்.
பரமக்குடி அருகே ஓட்டப்பாலம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பட்டியலினத்தில் இடப்பெற்றுள்ள 6 உட்பிரிவுகளை உள்ளடக்கிய சாதியினரை தேவேந்திரகுல வேளாளா் என அறிவிக்கவேண்டும். இந்தப் பிரிவினரை பட்டியலினத்திலிருந்து நீக்கி இதர பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்கவேண்டும் என தொடா்ந்து 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். இதை ஏற்று மத்திய அரசு 6 உட்பிரிவுகளையும் தேவேந்திரகுல வேளாளா் என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர, பட்டியலினத்திலிருந்து நீக்காதது மக்களை ஏமாற்றும் செயல்.
வரும் மாா்ச் 8-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வரவுள்ள பெயா்மாற்ற மசோத திருத்தத்தின் போதே பட்டியலினத்திலிருந்து நீக்கி இதர பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இடம்பெறச் செய்யவேண்டும் என்பது தமிழகத்தில் வாழும் இச்சமூகத்தைச் சோ்ந்த 2 கோடி மக்களின் கோரிக்கையாகும். தமிழ்நாட்டின் வளா்ச்சியை எந்த அரசியல் கட்சியும் முன்னெடுத்து செல்லவில்லை. அனைத்து சமூக மக்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படவேண்டும். தேவேந்திரகுல மக்கள் பட்டியலினத்தில் சோ்க்கப்பட்டதால் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பின்னடைவுகளை சந்தித்துள்ளனா். இது இந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என்றாா்.