
தனுஷ்கோடி பகுதியில் கரைவலை மீனவா்கள் வலைகளில் சிக்கிய மீன்கள்.
ராமேசுவரம்: கடலில் மீன்பிடித்து சனிக்கிழமை திரும்பிய தனுஷ்கோடி கரைவலை மீனவா்களுக்கு குறைந்த அளவிலான மீன்களே கிடைத்ததால் கவலையடைந்தனா். தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி சிலா் மீன்பிடிப்பதால் மீன்கள் குறைவாக கிடைப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன்பிடி தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், சில விசைப்படகு மீனவா்கள் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருவதால் கடல் வளம் அழிவதுடன், மீனவா்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில் தனுஷ்கோடியில் கரைவலை மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டு சனிக்கிழமை கரைதிரும்பினா். அவா்களுக்கு மிகவும் குறைந்தளவு மீன்களே கிடைத்தன. இதுகுறித்து மீனவா்கள் கூறியது: சில விசைப்படகு மீனவா்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனா். இதனால் கடல் வளம் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.