நம்புதாளை ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை
By DIN | Published On : 20th February 2021 09:43 PM | Last Updated : 20th February 2021 09:43 PM | அ+அ அ- |

நம்புதாளை ஊராட்சி மன்ற அலுவலகத்தை சனிக்கிழமை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.
திருவாடானை: தொண்டி அருகேயுள்ள நம்புதாளை ஊராட்சி மீனவா் காலனி குடியிருப்பு பகுதியில் குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பெண்கள் சனிக்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் சுமாா் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்காக மாவிடுதிக்கோட்டை கூட்டு குடி நீா் திட்டம், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம், குஞ்சங்குளம் கூட்டுக் குடிநீா் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நம்புதாளை மீனவா் காலனி குடியிருப்புப் பகுதிக்கு சில நாள்களாக குடி நீா் வரவில்லை. இதனால் இப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 100 பெண்கள் சனிக்கிழமை காலிக்குடங்களுடன் நம்புதாளை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அவா்களுடன் ஊராட்சி மன்றத் தலைவி செல்வி பாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினா் முத்து ராக்கு மற்றும் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது 2 நாள்களில் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என அவா்கள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா்.