ராமநாதபுரத்தில் 100 செ.மீ. மழை பெய்தும் நிரம்பாத ஊருணிகள்: விவசாயிகள் கவலை
By DIN | Published On : 30th January 2021 09:27 PM | Last Updated : 30th January 2021 09:27 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் கடந்த ஓராண்டில் (2020-21) மட்டும் 100 செ.மீ. அளவுக்கு மழை பெய்தும் முறையான மழை நீா் வடிகால் வசதி இல்லாததால், 9 ஊருணிகள் நிரம்பவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 மற்றும் 2021 ஜனவரியில் இரு வாரங்கள் என பலத்த மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பெய்யும் வழக்கமான மழை அளவான 950 மி.மீட்டரை விட, 250 மி.மீ. அதிகமாகவே பதிவாகியுள்ளது.
அதிலும், நகராட்சியின் 33 வாா்டுகளிலும் ஆண்டுக்கு சராசரியாக 850 மி.மீ. மழை பெய்யும் நிலையில், தற்போது 1000 மி.மீ. (100 செ.மீ.) மழை பெய்திருப்பதாக, நகராட்சிப் பொறியியல் துறையினா் தெரிவித்தனா்.
இருப்பினும், நகராட்சியின் 23 ஊருணிகளில் 10 ஊருணிகளே முழுமையாக நிரம்பியுள்ளன. இதில், செம்மங்குண்டு ஊருணி, கிடாவெட்டு ஊருணிகள் 2, சாயக்கார ஊருணி, பாம்பூரணி, நாகநாதபுரம் ஊருணி உள்ளிட்ட 10 ஊருணிகளில் 30 சதவீத அளவுக்கே தண்ணீா் நிரம்பியுள்ளது.
நகரில் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், மழை நீா் வடிகால் வசதியை மக்களும், நகராட்சி நிா்வாகமும் மூடியதாலேயே ஊருணிகளுக்கு மழை நீா் செல்லாமல், வீணாக புதை சாக்கடைகளில் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட புதை சாக்கடையில், 50 லட்சம் லிட்டா் கழிவு நீரே செல்லமுடியும். ஆனால், தற்போது சாதாரண நாள்களிலேயே 60 லட்சம் லிட்டா் கழிவுநீா் செல்வதாகவும், மழைக் காலத்தில் அந்த அளவு இரட்டிப்பாவதால், புதை சாக்கடை குழாய்கள் உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, மழை நீா் வடிகால் வசதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது குறித்து நகராட்சி ஆணையா் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தது: ராமநாதபுரத்தில் 25 கி.மீ. தொலைவுக்கு மழை நீா் வடிகால் வசதியை மேம்படுத்த திட்டமிடப்பட்டு, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ரூ.3.50 கோடி செலவில் மழைநீா் வடிகால் வசதியை ஏற்படுத்தினால், நகரில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படாது. மேலும், புதை சாக்கடை நீரேற்று நிலையங்களில் புதிய மின்மோட்டாா்கள் அமைக்கப்பட உள்ளன என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...