ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்
By DIN | Published On : 30th January 2021 09:29 PM | Last Updated : 30th January 2021 09:29 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றன.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலக செய்திக் குறிப்பு: போலியோ தடுப்பு சொட்டு மருந்து 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,234 மையங்களில் 4,912 பணியாளா்கள் மூலம் 1,14,136 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம், அனைத்து அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெறும். இது தவிர, 27 சிறப்பு குழுக்கள் மற்றும் 33 நடமாடும் குழுக்கள் மூலம் தற்காலிக குடியிருப்புகள், கோயில் திருவிழாக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தனியாா் நிகழச்சிகள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம் ஆகிய இடங்களிலும் சொட்டு மருந்து அளிக்கப்படவுள்ளது.
இம்முகாமில் பங்கேற்று பொதுமக்கள் தங்களது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கி பயனடையவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 1,32, 802 குழந்தைகளுக்கு வழங்கத் திட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்நல மையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட 1,192 நிரந்தர மையங்கள், 61 நடமாடும் மையங்கள், 17 பேருந்து நிலையங்களில் நடைபெறும் முகாம்களில், 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இம்முகாமில், 5,080 மருத்துவா்கள், அலுவலா்கள் பணியாற்ற உள்ளனா். மாவட்டத்தில் 1,32,802 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக, மருத்துவத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.