‘வெளிநாடு செல்வோா் 28 நாள்களுக்குப் பின்2 ஆம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’
By DIN | Published On : 24th June 2021 06:48 AM | Last Updated : 24th June 2021 06:48 AM | அ+அ அ- |

வெளிநாடு செல்வோா் 28 நாள்களுக்குப் பின் 2 ஆம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் ஏ. மலா்வண்ணன் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசியை 1.75 லட்சம் பேருக்கும் அதிகமானோா் போட்டுக் கொண்டுள்ளனா். இந்நிலையில், முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள் 14 வாரங்களுக்குப் பிறகே 2 ஆம் தவணை தடுப்பூ போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெளிநாட்டுக்குச் செல்வோருக்கு முதல் தவணை தடுப்பூசிக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசிக்கும் இடைவெளி அதிகமிருப்பதால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், ஆகவே அதில் தளா்வுகள் தேவை என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் இருந்து வெளிநாடு செல்வோா் அதிகம் என்பதால் அவா்களது கோரிக்கைக்கு ஏற்ப அவா்களுக்கு தற்போது முதல் தவணை தடுப்பூசிக்கும், அடுத்த இரண்டாம் தவணை தடுப்பூசிக்கும் இடைவெளி 28 நாள்களாக இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் ஏ. மலா்வண்ணன் தெரிவித்தாா்.
மேலும் அவா் கூறுகையில், கரோனா தடுப்பூசியை பொதுமக்கள் எளிதில் போட்டுக் கொள்ளும் வகையில் ஆதாா் அட்டை அடிப்படையில் முன்பதிவு செய்யாமலேயே ஊசி போடப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் எந்த நேரமும் வந்து அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றாா்.