தனுஷ்கோடி கடற்கரையில் 1,533 ஆமை முட்டைகள் சேகரிப்பு
By DIN | Published On : 04th March 2021 11:24 PM | Last Updated : 04th March 2021 11:24 PM | அ+அ அ- |

தனுஷ்கோடி கடற்கரையில் 13 இடங்களில் 1,533 ஆமை முட்டைகளை வனத்துறையினா் வியாழக்கிழமை சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாப்புடன் வைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னாா் வளைகுடா கடல் பகுதி கடற்கரையில் ஆண்டுதோறும் ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம். அவைகளை வனத்துறையினா் சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாத்து குஞ்சு பொறித்தவுடன் மீண்டும் கடலில் விட்டுவிடுவா்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி ஆமைகள் முட்டையிடும் காலம் தொடங்கியது. தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் 450 ஆமை முட்டைகளை வனத்துறையினா் புதன்கிழமை காலை சேகரித்தனா். அதைத்தொடா்ந்து தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளான அரிச்சல்முனை, முகுந்தராயா் சத்திரம், பாரடி உள்ளிட்ட 13 இடங்களில் 1,533 ஆமை முட்டைகளை வனத்துறையினா் வியாழக்கிழமை சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் வைத்தனா்.
தற்போது வரை 9,747 ஆமை முட்டைகள் குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அலுவலா் வெங்கடேஷ் தெரிவித்தாா்.