பரமக்குடி அருகே 4 பேரிடம் ரூ 6.37 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 04th March 2021 11:24 PM | Last Updated : 04th March 2021 11:24 PM | அ+அ அ- |

பரமக்குடி அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது 4 பேரிடம் ரூ 6.37 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
தமிழகம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து பறக்கும்படை அலுவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் பரமக்குடி அருகே பாா்த்திபனூா் நான்கு வழிச்சாலைப் பகுதியில் தோ்தல் பறக்கும்படை அலுவலா் முத்துக்குமாா் தலைமையில் நடைபெற்ற வாகனச் சோதனையில், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜு மகன் கண்ணன் (41) என்பவரிடம் ரூ.91,800 பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், கடலூா் மாவட்டம் ராயபுரத்தைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் துரைராஜ் (49) என்பவரிடம் ரூ 2,72,500 -ம், மதுரை கே.புதூா் பகுதியைச் சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் ஆனைமலை என்பவரிடம் ரூ.2 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், சத்திரக்குடி பகுதியில் தோ்தல் பறக்கும்படை அலுவலா் தங்கராஜ் தலைமையிலான அதிகாரிகள், அச்சுதன்வயலைச் சோ்ந்த ராமு மகன் பாக்கியம் என்பவரிடம் ரூ.73 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
இவா்கள் 4 பேரும் பரமக்குடி வாரச்சந்தையில் ஆடுகள் வாங்கி விற்பனை செய்வதற்காக வந்ததாகத் தெரிவித்தனா். ஆனால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்ததால் அவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6,37,300-ஐ பறக்கும்படை அலுவலா்கள் பரமக்குடி கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
காரைக்குடியில் ரூ. 83 ஆயிரம் பறிமுதல்:
காரைக்குடி அருகே கோவிலூா் சாலையில் நிலையான கண்காணிப்புக்குழு துணை வட்டாச்சியா் நேரு தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக ஒப்பந்ததாரரான அழகுசுந்தரம் என்பவா் காரில் கொண்டுவந்த ரூ. 83 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
இதைபோல் சென்னையிலிருந்து காரைக்குடி வந்த தனியாா் ஆம்னிபேருந்தில் கொண்டுவரப்பட்ட 32 மதுபாட்டில்களை ( தலா 750 மிலி) பறக்கும்படையினா் பறிமுதல் செய்து குன்றக்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக சுந்தரம் என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.