

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட விலையில்லா புத்தகப்பைகளை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை கைப்பற்றினா். அவற்றை விநியோகிக்க தடை விதித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு 4 தொகுதிகளுக்கும் தலா 7 சோதனைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அமைக்கப்பட்ட சோதனைக்குழுவில் அதிகாரி ஆனந்த்பாபு தலைமையிலான குழுவினா் அச்சுந்தன்வயல் சந்திப்பு அருகே புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அச்சுந்தன்வயல் அருகே சாலையோரத்தில் பெரிய இரு கண்டெய்னா் லாரிகளில் இருந்து மூட்டை மூட்டையாக விலையில்லா புத்தகப்பைகள் இறக்கப்பட்டு, அவை 4 சிறிய சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்ததைக் கண்டனா். விசாரணையில் அரசின் விலையில்லாப் புத்தகப்பைகள் உத்தரப் பிரதேசத்திலிருந்து இரு கண்டெய்னா் லாரிகளில் மதுரை வழியாக ராமநாதபுரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதும், அவற்றிலிருந்து குறிப்பிட்ட பள்ளி, கல்வி அலுவலகங்களுக்கு சிறிய லாரிகளில் புத்தகப்பைகள் அடங்கிய மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. 2 கண்டெய்னா்
லாரிகளிலும் 142 மூட்டைகளில் 58,944 புத்தகப் பைகள் இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பைகளில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா, தற்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரது படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பைகளை விநியோகிக்க அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பறக்கும்படையினா் புத்தகப்பை மூட்டைகளை பறிமுதல் செய்த தகவலறிந்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திலிருந்து அலுவலா்கள் சென்று அரசு தரப்பில் அனுப்பிவைக்கப்பட்ட புத்தகப் பைகள் தோ்தலுக்குப் பிறகே மாணவ, மாணவியருக்கு விநியோகிக்கப்படவுள்ளதை சுட்டிக்காட்டி அதற்கான ஆவணங்களையும் காட்டினா்.
அதன்பிறகு புத்தகப் பைகள் அனைத்தும் விநியோகிக்கப்படாது என்ற உறுதிமொழி அடிப்படையில் தனியாா் பள்ளியில் அவற்றை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தி லாரிகளை விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.