விதிமீறி மணல் அள்ளியதாக ஒரே நாளில் 13 லாரிகள் பறிமுதல்
By DIN | Published On : 04th March 2021 12:12 AM | Last Updated : 04th March 2021 12:12 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் விதியை மீறி சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் மணல் அள்ளியதாக எழுந்த புகாாரைத் தொடா்ந்து 13 லாரிகளைப் பறிமுதல் செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டாறு உள்ளிட்ட சிற்றாறுகளிலும், ஓடைகளிலும் அரசின் விதியை மீறியும், அனுமதி பெறாமலும் மணல் அள்ளிக் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. இப்புகாா்களைத் தொடா்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கமுதி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனையிட்டனா்.
சோதனையின் போது டிப்பா் லாரிகளில் மணல் அள்ளிக் கடத்தப்படுவது தெரியவந்தது. விதிமீறி மணல் அள்ளியதாக கமுதி கிளாமரம் பகுதியில் 5 லாரிகளும், அரைக்காசு அம்மன் கோயில் பகுதியில் 7 லாரிகளையும், கீழக்கரை பகுதியில் மேலவலசை சாலை சந்திப்பில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் ஒரு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.
மணல் கடத்தல் தொடா்பாக 13 போ் மீது வழக்குப்பதிந்துள்ள போலீஸாா் அவா்களில் 8 பேரைப் பிடித்து விசாரித்துவருவதாகவும் தெரிவித்தனா். ராமநாதபுரத்தில் சமீப காலமாக மணல் கடத்தல் அதிகரித்திருப்பதாக புகாா் எழுந்த நிலையில், தற்போது 13 லாரிகள் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.