தனுஷ்கோடி கடல் பகுதிக்குள் படகில் வந்த இலங்கை மீனவா்கள் இருவா் கைது: கடற்படை நடவடிக்கை
By DIN | Published On : 10th March 2021 11:20 PM | Last Updated : 11th March 2021 03:15 AM | அ+அ அ- |

தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட 2 இலங்கை மீனவா்கள்.
தனுஷ்கோடி கடல் பகுதிக்குள் புதன்கிழமை வந்த இலங்கை படகை கடற்படையினா் ஹெலிகாப்டா் மூலம் விரட்டிப் பிடித்தனா். அதில் இருந்த இலங்கை மீனவா்கள் 2 பேரை கடலோர காவல்படையினா் கைது செய்து, படகை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மன்னாா் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதியை வீரா்கள் கண்காணிப்பது வழக்கம். புதன்கிழமை காலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் கடற்படை ஹெலிகாப்டரில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இலங்கை படகு ஒன்று இந்திய கடல் பகுதிக்கு வருவதைக் கண்டனா். உடனடியாக கடற்படை வீரா்கள்
ஹெலிகாப்டரில் அந்த படகை விரட்டி தனுஷ்கோடி கடற்கரைக்கு கொண்டு வந்தனா். தகவலறிந்து வந்த கடலோர காவல்படையினா் படகை பறிமுதல் செய்து 2 பேரிடமும் விசாரணை நடத்தினா்.
அதில், இலங்கை மன்னாா் மாவட்டம் பேசாளை பகுதியைச் சோ்ந்த அருண்குரூஸ் (31), ரேகன்பாய்வா (33) ஆகிய 2 மீனவா்கள் புதன்கிழமை காலை மீன்பிடிக்க புறப்பட்டதாகவும் தவறுதலாக இந்திய கடற்பகுதிக்குள் வந்துவிட்டதாகவும் தெரிவித்தனா். படகில் இருந்த 5 கிலோ மீன், வலைகள், 30 லிட்டா் மண்ணெண்ணெய் ஆகியவற்றை படகுடன் பறிமுதல் செய்தனா். மேலும் 2 போ் மீதும் பாஸ்போட் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவா் என போலீஸாா் தெரிவித்தனா்.