ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதை கண்டித்து அதிமுகவினா் சாலை மறியல்
By DIN | Published On : 12th March 2021 01:37 AM | Last Updated : 12th March 2021 01:37 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்/ராமேசுவரம்: ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து அதிமுக தொண்டா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணிக்கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்தும், முன்னாள் அமைச்சா் மணிகண்டனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததைக் கண்டித்தும் அதிமுகவினா் புதன்கிழமை இரவு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா். வியாழக்கிழமை இரண்டாவது நாளாக மண்டபம் பகுதியில் அதிமுகவினா் சிலா் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து ராமநாதபுரம் அரண்மனை முன்பாக முன்னாள் அமைச்சா் எம்.மணிகண்டனின் ஆதரவாளா்களான முன்னாள் பேரூராட்சி தலைவா் ராமமூா்த்தி உள்ளிட்ட ஏராளமானோா் அதிமுக தலைமைக்கு எதிராக முழக்கமிட்டவாறு சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது இரு பெண்கள்சாலையில் படுத்து உருண்டனா்.
வழக்குப்பதிவு: ராமநாதபுரத்தில் புதன்கிழமை இரவில் போராட்டம் நடத்திய 10 போ் மீதும், வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 65 போ் மீதும் வழக்குப் பதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
ராமேசுவரம்: ராமநாதபுரம் பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து பாம்பனில் மீனவ அணி நிா்வாகி அலெக்ஸ் தலைமையில் சாலையில் உருண்டு வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த போலீஸாா் அனைவரையும் அப்புறபடுத்தினா்.