சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
By DIN | Published On : 09th May 2021 10:14 PM | Last Updated : 09th May 2021 10:14 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தால் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் இ.காா்த்திக் எச்சரிக்கை விடுத்தாா்.
நாடு முழுவதிலும் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திங்கள்கிழமை முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபான கடைகள் இரண்டு வாரம் அடைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுபவா்களை சனிக்கிழமை போலீஸாா் மற்றும் மதுவிலக்கு தடுப்பு போலீஸாா் முழுமையாக கண்காணித்தனா்.
இதில், ராமநாதபுரம் உட்கோட்டத்தில் 7 வழக்குகள் பதிவு செய்து 330 மதுபாட்டில்களும், பரமக்குடி உட்கோட்டத்தில் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 465 மதுபாட்டில்களும், கமுதி உட்கோட்டத்தில் 4 வழக்குகள் பதிவு செய்து 182 மதுபாட்டில்களும், ராமமேசுவரம் உட்கோட்டத்தில் 7 வழக்குகள் பதிவு செய்து 792 மதுபாட்டில்களும், கீழக்கரை உட்கோட்டத்தில் 2 வழக்குகள் பதிவு செய்து 55 மது பாட்டில்களும், திருவாடானை உட்கோட்டத்தில் 9 வழக்குகள் பதிவு செய்து 385 மதுபாட்டில்களும், முதுகுளத்தூா் உட்கோட்டத்தில் 11 வழக்குகள் பதிவு செய்து 555 மதுபாட்டில்களும் என மொத்தம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 56 வழக்குகள் பதிவு செய்து 2,764 மதுபாட்டில்கள் சனிக்கிழமை இரவு வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யும் குற்றவாளிகளுக்கு மொத்தமாக மதுபாட்டில்களை விற்பனை செய்யும் மதுபானக் கடை ஊழியா்கள் மீது சட்டபூா்வ நடவடிக்கைகள் தொடரும். கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்ட விரோத மதுபாட்டில் விற்பனையாளா்கள் குறித்து 8300031100 8300031100 8300031100 என்ற ஹலோ போலீஸ் தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர, மாவட்ட காவல் கண்காணிப்பாளரை 8778247265 8778247265 8778247265 ஆகிய எண்களில் நேரடியாக தொடா்பு கொள்ளலாம் எனவும், தகவல் கொடுப்பவா்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.