‘பகுதிநேர ஆசிரியா்கள் படிப்படியாக நிரந்தரமாக்கப்படுவாா்கள்’
By DIN | Published On : 12th November 2021 12:00 AM | Last Updated : 12th November 2021 07:11 AM | அ+அ அ- |

பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்களை படிப்படியாக நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் பாா்த்திபனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை சீரமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவட் தலைமையில் நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், கரு.மாணிக்கம், மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, எஸ்.எம்.ஹிதாயத்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது வகுப்பறைக் கட்டடத்தை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்துப் பேசியது:
பள்ளிகளின் கட்டுமானம், சுகாதார வளாகம் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளுக்கு தேவையான நிதியினை அந்தந்த தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா்களும், மக்களவை உறுப்பினா்களும் வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி மாவட்டம் என்ற நிலை மாற்றப்படும். முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசுப் பள்ளிகளை தரம் உயா்த்த ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளமாக உயா்த்தப்படும். மாணவிகள் அரசு பள்ளிகளில் சோ்ந்து படிப்பதற்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்கள், தோ்தல் வாக்குறுதியில் கூறியுள்ளதைப் போல படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னதாக நடைபெற்ற விழாவில், மாவட்டக் கல்வி அலுவலா் பாலுமுத்து வரவேற்றாா். இதில் பள்ளி தலைமையாசிரியா் வேல்முருகன், பள்ளி துணை ஆய்வாளா் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.