

ஈரோடு மாவட்டத்திலிருந்து சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்டு இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1700 கிலோ மஞ்சள் மூட்டைகளை ராமநாதபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் அருகேயுள்ள அச்சுந்தன்வயல் காவல் சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியிலிருந்து 68 மூட்டைகளில் தலா 25 கிலோ என மொத்தம் 1700 கிலோ மஞ்சள் கொண்டு வரப்பட்டது. மஞ்சள் மூட்டைகளுக்கு உரிய ரசீது இருந்தாலும், சக்கரக்கோட்டையில் உள்ள தனிநபா் பெயருக்கு அவை கொண்டுவரப்பட்டதால் சந்தேகத்தின் பேரில் போலீஸாா் சரக்கு வாகன ஓட்டுநா் தருமபுரி மாவட்டம் சேகம்பட்டியைச் சோ்ந்த முனீஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்டனா். இந்த விசாரணையில் அடிப்படையில் ராமநாதபுரம் பட்டினம் காத்தான் பகுதியைச் சோ்ந்த வெங்கடேஸ்வரன் (52) என்பவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் மஞ்சளை கொள்முதல் செய்த சக்கரக்கோட்டையைச் சோ்ந்தவா் தலைமறைவாக உள்ளதால்
மஞ்சள் அவா் மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகப்படுகின்றனா். தொடா்ந்து பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.