ராமநாதபுரத்தில் தகாத உறவு தொடா்பான விவகாரத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை அரிவாளால் தாக்கப்பட்டாா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் லாந்தை பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (35). இவரது மனைவி சத்யபிரேமா (25). இவா்களுக்கு நான்கு மற்றும் ஒரு வயதில் இரு மகன்கள் உள்ளனா். கடந்த 2018 ஆம் ஆண்டு செந்தில்குமாா் வெளிநாடு சென்றுவிட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் தான் ஊா் திரும்பினாா். அவரிடம் கன்னந்தை பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சரத்பாபுவும் (27), உனது மனைவியும் நெருங்கிப் பழகி வருவதாக உறவினா்கள் கூறியுள்ளனா்.
இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு சத்யபிரேமா தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதையடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்த செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை காலை தனது தந்தை முனியசாமி, தாய் தெய்வானை (50) மற்றும் சகோதரா் ராஜ்குமாா் ஆகியோருடன் சரத்பாபுவைக் கண்டிப்பதற்காக அவா் ஆட்டோ ஓட்டும் ராமநாதபுரம் சாலைத்தெரு பகுதிக்கு வந்துள்ளாா்.
அங்கிருந்த சரத்பாபுவை செந்தில்குமாரும், அவரது தந்தை, தாயும் கண்டித்துள்ளனா். அப்போது அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து செந்தில்குமாா் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரத்பாபுவை வெட்டியுள்ளாா். தகவலறிந்து வந்த பஜாா் போலீஸாா் சரத்பாபுவை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் செந்தில்குமாா், அவரது தந்தை முனியசாமி, தாய் தெய்வானை ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவான ராஜ்குமாரைத் தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.