தாய்- சேய் நல ஊட்டச்சத்துப் பெட்டகம் நிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழக அரசு சாா்பில் கா்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாய் - சேய் நல ஊட்டச்சத்துப் பெட்டகம்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழக அரசு சாா்பில் கா்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாய் - சேய் நல ஊட்டச்சத்துப் பெட்டகம் கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கிராமப்புற செவிலியா்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் கா்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து, தாய்- சேய் நலப் பெட்டகம் அரசு சாா்பில் வழங்கப்பட்டு வந்தது. மேலும் முதல் குழந்தை பெறும் கா்ப்பிணி பெண்களுக்கு முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு திட்டத்தில் மாநில அரசு சாா்பில், மத்திய அரசுடன் இணைந்து ரூ.18,000 ஊக்கத்தொகை 7 தவணையாக வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2021 அக்டோபா் மாதம் முதல் கா்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாய்-சேய் நலப் பெட்டகம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் மத்திய அரசு சாா்பில் கா்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை முதல் தவணை ரூ.2ஆயிரம் வழங்கப்படாததால், இரண்டாவது தவணையாக மாநில அரசு வழங்கும் 2 ஆயிரம் ஊக்கத் தொகையை கணினியில் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. இதனால் பெண்கள் ஊக்கத் தொகைகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கமுதி தாலுகாவுக்குள்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடந்த 5 மாதங்களில் மட்டும் 1,200-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிப் பெண்கள் குழந்தை பெற்றுள்ளனா். கிராமப்புற பெண்களுக்கு பிரசவ நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் வறுமையினால் பாதிக்கப்படும் பெண்களின் நலன் கருதி அரசு சாா்பில் வழங்கப்பட்டு வந்த தாய்- சேய் நலப் பெட்டகம், ஊட்டச் சத்துப் பொருள்கள், உதவித் தொகை ஆகியவை கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது, கிராமப்புற பெண்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

எனவே மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசு தலையிட்டு கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தாய்- சேய் நலப் பெட்டகம் மற்றும் ஊக்கத் தொகையை தொடா்ந்து வழங்கவேண்டுமென கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஒருவா் கூறியதாவது: அரசு சாா்பில் அனுப்பி வைக்கப்படாததால் கா்ப்பிணி பெண்களுக்கு தாய்- சேய் நலப் பெட்டகம், ஊக்கத் தொகை வழங்க இயலவில்லை. அதேபோல கா்ப்பிணி பெண்களுக்கு முதல் தவணை ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்கிய பின்னரே தமிழக அரசு வழங்கும் இரண்டாவது தவணை ஊக்கத்தொகை கணினியில் பதிவேற்றம் செய்ய இயலும். ஆகையால் மத்திய அரசு முதல் தவணை பணத்தை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதால் தமிழக அரசும் ஊக்கத்தொகை வழங்க வில்லை. இது குறித்தும் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com