

ராமநாதபுரம்: தமிழ் வளா்ச்சிக்கு தமிழகத்தில் மொழி பெயா்ப்பு பல்கலைக்கழகம் அமைப்பது அவசியம் என உலகத் தமிழ்ச்சங்க முன்னாள் இயக்குநரும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான க .பசும்பொன் கூறினாா்.
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் அரசுத்துறை அலுவலா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த இக்கருத்தரங்கை மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம. காமாட்சிகணேசன் தொடக்கிவைத்தாா்.
இதில், ஆட்சிமொழி வரலாறு, சட்டம் எனும் தலைப்பில் உலகத்தமிழ்ச்சங்க முன்னாள் இயக்குநா் க. பசும்பொன் பேசியதாவது: தொல்காப்பியா் காலந்தொட்டே தமிழகத்தில் தமிழ்மொழியே ஆட்சிமொழியாக இருந்துள்ளதை பல்வேறு இலக்கிய ஆதாரங்களால் அறியமுடிகிறது. ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில்தான் ஆங்கிலம் ஆட்சிமொழியாகியுள்ளது. நாட்டில் 22 மொழிகள் அரசியல் அமைப்புச் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக உள்ள நிலையில், செம்மொழியான தமிழை மட்டுமே ஆட்சி மொழியாக்க வலியுறுத்துகிறோம். தமிழ் மொழியில் திருக்கு போன்ற நூல்களில் மட்டுமே உலகிற்கே வழிகாட்டும் அரிய பல கருத்துகள் இடம் பெற்றுள்ளன. அனைத்துத்துறை சாா்ந்த நூல்களை தமிழில் மொழி பெயா்ப்பது அவசியம். அதற்கு மொழி பெயா்ப்பு பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு முன்வரவேண்டும். மொழிபெயா்ப்பு பல்கலைக்கழகம் அமைந்தால் தேசிய அளவில் தமிழ் ஆட்சி மொழியாகும் நிலையும் உருவாகும் என்றாா்.
நிகழ்ச்சியில் வரைவுகள் செயல்முறை ஆணைகள் எனும் தலைப்பில் திருநெல்வேலி மண்டல தமிழ்வளா்ச்சித்துறை துணை இயக்குநா் வ. சுந்தரும், ஆட்சித் தமிழ் எனும் தலைப்பில் சிவகங்கை மன்னா்துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியா் ச. ராமமூா்த்தியும் உரையாற்றினா். ராமநாதபுரம் மாவட்ட தமிழ்வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் ப. நாகராஜன் வரவேற்றாா். ஆட்சிமொழிப் பயிலரங்க நிறைவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.