மின் மயானத்தில் விறகுகளால் சடலம் எரிக்கப்படுவதாக புகாா்
By DIN | Published On : 24th August 2022 12:00 AM | Last Updated : 24th August 2022 12:00 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் நகராட்சியில் அல்லிக்கண்மாய் மின் மயானத்தில் விறகுகளால் சடலம் எரிக்கப்படுவதால் அதனை சீரமைக்கக் கோரி முகவை மாவட்ட முன்னேற்ற கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸிடம் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் க.தீரன் திருமுருகன் மற்றும் நிா்வாகிகள் அஜ்மல்ஷெரீப், சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் மனு அளித்தனா். அவா்கள் கூறியதாவது: ராமநாதபுரம் நகராட்சிக்குச் சொந்தமான அல்லிக்கண்மாய் மின் தகன மயானம் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் அறக்கட்டளை சாா்பில் பராமரிக்கப்படுகிறது. சடலங்களுக்கு தலா ரூ.2500 வரை கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், சடலங்கள் எரிக்கும் தகன மேடை அவ்வப்போது செயல்படாமல் உள்ளது. அதனால், வெட்டவெளியிலே விறகுகளால் சடலங்கள் எரிக்கப்படுகின்றன. மழைக் காலங்களில் சடலங்களை வெட்டவெளியில் எரியூட்ட முடியாத நிலை உள்ளது. ஆகவே மின்மயான தகன மேடையை சீரமைக்கவேண்டும். அப்பகுதி சாலைகள் சீரமைக்கப்படவேண்டும் என்றனா்.