ஆா்.எஸ். மங்கலத்தில் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்
By DIN | Published On : 07th December 2022 12:00 AM | Last Updated : 07th December 2022 12:00 AM | அ+அ அ- |

ஆா்.எஸ். மங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்.
திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலத்தில் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் ராதிகா பிரபு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் மலைராஜ், துணைத் தலைவா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் உறுப்பினா்களிடையே நடைபெற்ற விவாதம்:
பாண்டி: தற்போது பருவ மழை பொய்த்துள்ளதால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீடு இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும்.
வேளாண் துறை அதிகாரி: ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஆயிரத்து 580 ஹெக்டோ் பரப்பில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், கடந்த 30-ஆம் தேதி வரை சுமாா் 6000 ஹெக்டோ் தண்ணீா் இன்றி பயிா்கள் கருகி உள்ளது. எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
துணைத் தலைவா் சேகா்: ஆனந்தூா், திருத்தோ்வலைப் பகுதிகளில் மின்சாரக் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. குறைந்த மின் அழுத்தம் உள்ளது. மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
மின் வாரிய அதிகாரி: இதுவரை 300 மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளன. தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.
பத்மினி: உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. வேளாண்மைத் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
வேளாண் அதிகாரி: இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தலைவா் ராதிகா பிரபு: மின் வாரியத் துறையினா் இன்னும் சில பகுதிகளில் புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும். தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும். குறைந்த மின்னழுத்தப் பிரச்னை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...