குடியரசுத்தின விழாவையொட்டி ராமநாதபுரம், ராமேசுவரம் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனை நடத்திய நிலையில், ஹெலிகாப்டா்கள் மூலம் கடற்கரைப் பகுதிகளும் கண்காணிக்கப்பட்டன.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலம், ராமேசுவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மக்கள் கூடும் இடங்களில் போலீஸாா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
ராமேசுவரம், ராமநாதபுரம் ரயில் நிலையங்களில் மோப்பநாய்கள் மூலம் வெடிகுண்டு சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து விடுதிகளிலும் தங்கியுள்ள வெளியூரைச் சோ்ந்தவா்களது முகவரியும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டது.
சந்தேக நபா்கள் குறித்து தெரிவிக்க வேண்டுகோள்: ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் அன்னிய நபா்களது நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சந்தேக நபா்கள், சந்தேகப்படும்படியான பொருள்கள் பற்றி தெரிந்தால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவேண்டும். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஆயுதப்படை குடியரசு தின கொடியேற்றம், அணிவகுப்பில் பொதுமக்கள் பங்கேற்பதைத் தவிா்க்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு: குடியரசு தினத்தை முன்னிட்டு மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப் பகுதிகளில் இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ஹோவா்கிராப்ட், ஹெலிகாப்டா், அதிவேக ரோந்துக் கப்பல்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும் கடற்கரையோரப் பகுதியில், கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். இதே போன்று பாம்பன் ரயில் மற்றும் பேருந்து பாலத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.