சரக்கு லாரி மோதியதில் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு
By DIN | Published On : 31st July 2022 12:06 AM | Last Updated : 31st July 2022 12:06 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே சரக்கு லாரி மோதியதில், தனியாா் பேருந்து நடத்துநா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் தேரிருவேலியைச் சோ்ந்த சேதுபாண்டியன் பூசாரி மகன் விஜயரெகுநாதன் (38). இவரது மனைவி அபிநயா (32). இவா்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. ஆண் குழந்தை உள்ளது. தற்போது, இவா்கள் ராமநாதபுரம் பட்டினம்காத்தான் தெற்குத் தெருவில் வசித்து வருகின்றனா். விஜயரெகுநாதன் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், விஜயரெகுநாதன் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் தன்னுடன் பணிபுரியும் ஓட்டுநா் பாலகிருஷ்ணன் என்பவரை தனியாா் பேருந்து நிறுத்துமிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளாா். பின்னா், வீட்டுக்கு திரும்பியுள்ளாா். அப்போது, பட்டினம்காத்தான் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மோதிவிட்டுச் சென்றுவிட்டது. இதில்,
விஜயரெகுநாதன் தலையில் பலத்த காயம் அடைந்து மயக்கமடைந்தாா்.
உடனே, அப்பகுதியினா் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் விஜயரெகுநாதன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விபத்துக்கு காரணமான சரக்கு லாரி குறித்து விசாரித்து வருகின்றனா்.