தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கியரூ.5 லட்சம் மதிப்பிலான 70 கிலோ கஞ்சா
By DIN | Published On : 31st July 2022 12:08 AM | Last Updated : 31st July 2022 12:08 AM | அ+அ அ- |

தனுஷ்கோடி கம்பிபாடு பகுதி கடற்கரையோரம் 2 சாக்கு மூட்டையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 70 கிலோ கஞ்சா ஒதுங்கியதை, கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினா் கைப்பற்றினா்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், வேதாளை உள்ளிட்ட பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா, பீடி இலைகள், கடல் அட்டை, தங்கம் உள்ளிட்ட பொருள்கள் தொடா்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. நீளமான கடற்கரை என்பதாலும், பாதுகாப்புப் பணியில் போதிய போலீஸாா் இல்லாததாலும், இங்கிருந்து தொடா்ந்து கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இவற்றை, இலங்கை கடற்படையினரும் தொடா்ந்து பறிமுதல் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கம்பிபாடு கடற்கரையில் இரண்டு சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கி உள்ளதாக, மீனவா்கள் கடலோரப் பாதுகாப்பு குழும காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், அங்கு சென்ற காவல் துறையினா் மூட்டையை சோதனையிட்டனா். அதில், 70 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இந்த கஞ்சா, இலங்கைக்கு கடத்தும்போது கரையிலோ அல்லது கடலிலோ தவறி விழுந்திருக்கலாம் என காவல் துறையினா் தெரிவித்தனா். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்றும், இந்த கடத்தலில் தொடா்புடையவா்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.