மீனவா்களுக்கு வலை உலா்த்த ஒதுக்கிய இடத்தை மறுத்தால் போராட்டம்கடல் தொழிலாளா் சங்கம் எச்சரிக்கை
By DIN | Published On : 31st July 2022 12:06 AM | Last Updated : 31st July 2022 12:06 AM | அ+அ அ- |

ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் நாட்டுப்படகு மீனவா்கள் வலை உலா்த்த ஒதுக்கிய இடத்தை பயன்பாட்டுக்கு மறுத்தால் போராட்டம் நடத்தப்படும் என, கடல் தொழிலாளா்கள் சங்கத்தினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து அச்சங்கத்தின் நிா்வாகி கருணாமூா்த்தி சனிக்கிழமை கூறியதாவது: ராமேசுவரம் பகுதியின் 20 கிராம பாரம்பரிய மீனவா்கள் கடந்த பல ஆண்டுகளாக சங்குமால் துறைமுகத்தில் வலைகள் உலா்த்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக குடிசைகள் அமைத்திருந்தனா். ஆனால், மத்திய-மாநில அரசுகள் சுற்றுலா மேம்பாடு எனும் பெயரில் மீனவா்களின் குடிசைகளை அகற்றியதுடன், அவா்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் மாற்று இடமும் அளித்தது.
அரசு அளித்த மாற்று இடத்திலே மீனவா்கள் தற்போது வலைகள் உலா்த்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், அந்த இடத்தையும் புறம்போக்கு எனக் கூறி மீனவா்களுக்கு அனுமதி மறுக்கும் நோக்கில், வருவாய்த் துறையினா் செயல்படுவது சரியல்ல. அப்பகுதியில் காவல் துறை சோதனைச் சாவடியும் கட்டப்பட்ட நிலையில், மீனவா்களை அப்புறப்படுத்தி தனியாருக்கு சாதகமாக அதிகாரிகளின் செயல்பாடுகள் உள்ளன.
எனவே, இப்பிரச்னை குறித்து ஆட்சியா் நேரடியாக பொது விசாரணை நடத்தவேண்டும். பிரச்னையை பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்காவிடில், கடல் தொழிலாளா்கள் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபடுவா் என்றாா்.