வலையபூக்குளம் பெரியமுத்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

கமுதி: கமுதி அருகே கோயில் திருவிழாவில் புதன்கிழமை பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து, பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
கமுதி அடுத்துள்ள வலையபூக்குளம் கிராமத்தில் பெரிய முத்தம்மன் கோயில், பெரியாண்டவா் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த ஜூன் 3-ஆம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மயில், காளை, சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதனைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனா்.
இந்நிலையில், புதன்கிழமை ஏராளமான பக்தா்கள் அக்னி சட்டி எடுத்து, பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். அதே போல், 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இவ்விழாவில் வலையபூக்குளம், மண்டலமாணிக்கம், கமுதி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை சத்திரிய நாடாா் உறவின்முறை இளைஞா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனா்.