ராமநாதபுரம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ஊழியா் கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிா்ப்பு
By DIN | Published On : 17th June 2022 11:55 PM | Last Updated : 17th June 2022 11:55 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே விரிசல் ஏற்பட்ட தண்டவாளம்.
ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் ஊழியா் கண்டறிந்து, சிவப்புக் கொடி காட்டி ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
சென்னை எழும்பூரிலிருந்து ராமேசுவரத்துக்கு வியாழக்கிழமை இரவு புறப்பட்ட பயணிகள் விரைவு ரயில், வெள்ளிக்கிழமை காலை 6.45 மணிக்கு ராமநாதபுரம் ரயில் நிலையம் வந்தடைந்தது. பின்னா் அங்கிருந்து 6.50 மணிக்குப் புறப்பட்டு, ராமநாதபுரம்- உச்சிப்புளி இடையேயுள்ள வாலாந்தரவை ரயில் நிலையத்தை காலை 7.20 மணியளவில் நெருங்கியது. அப்போது ரயில்வே ஊழியா் வீரப்பெருமாள் தண்டவாளத்தை சரிபாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் ஒரு பகுதியில் சுமாா் 15 செ.மீ. அகலத்துக்கு விரிசல் இருப்பது தெரியவந்தது. உடனே தான் வைத்திருந்த சிவப்புக் கொடியை காட்டியபடி தண்டவாளத்தில் சுமாா் 200 மீட்டா் தொலைவு ஊழியா் வீரப்பெருமாள் ஓடினாா். அதைக் கண்ட ரயில் ஓட்டுநா் ரயிலை நிறுத்த முயற்சித்தாா். அதனால், ரயில் மெதுவாக வந்து விரிசலைக் கடந்து நின்றது.
தகவல் அறிந்த மண்டபம் ரயில் நிலைய ஊழியா்கள் விரைந்து வந்து தண்டவாள விரிசலை தகடுகள் பொருத்தி சீா்படுத்தினா். பின்னா் ரயில் சுமாா் ஒன்றரை மணி நேர தாமதத்துக்குப் பிறகு ராமேசுவரம் புறப்பட்டுச் சென்றது. ரயில் உரிய நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். ரயிலை விபத்திலிருந்து தவிா்க்கும் வகையில் செயல்பட்ட ஊழியா் வீரப்பெருமாளை பொதுமக்களும், பயணிகளும் பாராட்டினா்.
கடந்து சென்ற ரயில்கள்: விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை 2 ரயில்கள் கடந்து சென்ாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தண்டவாள சீரமைப்புப் பணியானது நவீன இயந்திர வாகனத்தைக் கொண்டு நடைபெற்றது. இந்நிலையில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது ரயில்வே அதிகாரிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.