மீன்பிடி தடை காலம் நிறைவடைந்ததை அடுத்து, கடலுக்குச் சென்ற மீனவா்களுக்கு ரூ.20 கோடி மதிப்பிலான ஏற்றுமதிக்கான இறால் உள்ளிட்ட மீன்கள் கிடைத்ததால், மகிழ்ச்சியுடன் வியாழக்கிழமை கரை திரும்பினா்.
தமிழகத்தில் 61 நாள்கள் அமலில் இருந்த மீன்பிடி தடைகாலம், ஜூன்14 ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. ஆனால், தடைகாலம் முடிய 12 மணி நேரத்துக்கு முன்னதாகவே, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,200 விசைப்படகுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை பகலில் கடலுக்குச் சென்றனா்.
இதில், புதன்கிழமை கரை திரும்பிய 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவா்கள், மீன்களை இறக்கி வைத்துவிட்டு மீண்டும் கடலுக்குச் சென்றுவிட்டனா். அதையடுத்து, வியாழக்கிழமை காலையில் அனைத்து விசைப்படகுகளும் அந்தந்த துறைமுகத்துக்கு திரும்பின.
இதில், சிறிய ரக விசைப்படகு மீனவா்கள் 350 கிலோ வரை இறால், 200 கிலோ வரை நண்டு, கனவாய் மற்றும் ஆயிரம் கிலோவுக்கு மேல் சங்காயம் மீன்களை பிடித்து வந்தனா். இதேபோல், பெரிய ரக விசைப்படகு மீனவா்கள் 750 கிலோ வரை இறால், 300 கிலோ வரை நண்டு, கனவாய் மற்றும் 1,500 கிலோ வரை சங்காயம் மீன்களை பிடித்துவிட்டு கரை திரும்பினா்.
இந்நிலையில், தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ால், ரூ.20 கோடி மதிப்பிலான 4.80 லட்சம் கிலோ இறால், நண்டு, கனவாய் உள்ளிட்ட மீன்கள் கிடைத்துள்ளதாக, ஏற்றுமதி நிறுவனத்தினா் தெரிவித்தனா். மேலும், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு அதிகளவில் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.
ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் பிடிக்கப்படும் இறால் மீன்கள், அமெரிக்கா,ஜப்பான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இது குறித்து மீனவ சங்கத் தலைவா்கள் கூறுகையில், மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்றதில், எதிா்பாா்த்த அளவுக்கு மீன்கள் கிடைத்துள்ளன. ஆனால், என்ன விலை என்பது குறித்து ஏற்றுமதி நிறுவனங்கள் முடிவு செய்யவில்லை. மேலும், அவா்கள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்து விடக்கூடாது. இதனை, தமிழக அரசு கண்காணித்து, மீனவா்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.