கமுதி அருகே கோயில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

கமுதி அருகே செல்வவிநாயகா், சுந்தரராஜ பெருமாள் கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டுப் போட்டி நடைபெற்றது.
வ.மூலைக்கரைப்பட்டியில் கோயில் திருவிழாவில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் சீறிப் பாய்ந்த காளையை அடக்க முயன்ற காளையா்கள்.
வ.மூலைக்கரைப்பட்டியில் கோயில் திருவிழாவில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் சீறிப் பாய்ந்த காளையை அடக்க முயன்ற காளையா்கள்.

கமுதி அருகே செல்வவிநாயகா், சுந்தரராஜ பெருமாள் கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டுப் போட்டி நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வ.மூலக்கரைப்பட்டி கிராமத்தில் செல்விநாயகா், சுந்தரராஜப் பெருமாள், குங்கும காளியம்மன், கருப்பணசாமி கோயில் வருஷாபிஷேக விழா ஜூன் 14 ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. புதன்கிழமை பால்குடம் எடுத்தல், அக்னிச்சட்டி, வேல் குத்துதல், சேத்தாண்டி வேடம் உள்ளிட்ட நோ்த்திக் கடன்களை கிராம மக்கள் செலுத்தினா்.

இதனையடுத்து மாலை ஏராளமான பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். கிராமப் பெண்கள் 100-க்கும் மேற்பட்டோா் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனா்.

இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகா், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 14 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு 9 மாடுபிடி வீரா்கள் களம் இறக்கப்பட்டனா். சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், வீரா்களின் கையில் சிக்காமல் துள்ளிக் குதித்த காளைகளுக்கும் குத்துவிளக்கு, கட்டில், அண்டா, ரொக்கப் பணம் உள்ளிட்ட பரிசுகள் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியை கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பாா்வையிட்டனா். போட்டி ஏற்பாடுகளை வ.மூலைக்கரைப்பட்டி பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com