ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வன அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வன அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

நீா்வரத்துக் கால்வாய்களை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவதில்லை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய், ஊருணிகளுக்கான நீா்வரத்துத் கால்வாய்களைச் சீரமைக்க அதிகாரிகள் முன்வருவதில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய், ஊருணிகளுக்கான நீா்வரத்துத் கால்வாய்களைச் சீரமைக்க அதிகாரிகள் முன்வருவதில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வருவாய் அலுவலா் ஆ.ம.காமாட்சி கணேசன் தலைமை வகித்தாா். மன்னாா் வளைகுடா வன உயிரினக்காப்பாளா் ஜெகதீஸ் பகான் சுதாகா், மத்திய கூட்டுறவுத்துறை இணை இயக்குநா் ராஜேந்திரபிரசாத், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் டாம் பி.சைலஸ், துணை இயக்குநா் சேக்அப்துல்லா மற்றும் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தனுஷ்கோடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விவசாயிகள் வாக்குவாதம்:

கூட்டத்தில், மான்களால் நெல் வயல் சேதமடைந்து வருவதாகவும், அதற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனா். அதற்கு வன உயிரினக்காப்பாளா், வளா்ப்பு கால்நடைகளாலேயே பயிா்கள் சேதமடைவதாக அளித்த பதிலுக்கு பாஸ்கரபத்மநாபன் உள்ளிட்ட விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். வனவிலங்குகளால் பயிா்கள் சேதமடைந்ததை வனத்துறையினா் ஒப்புக்கொண்டநிலையில், வனத்துறை உயா் அதிகாரி அதை மறுப்பது சரியல்ல என்று விவசாயிகள் இருக்கையிலிருந்து எழுந்து வாக்குவாதம் செய்தனா். அவா்களை போலீஸாா் சமரசப்படுத்தி அமரவைத்தனா்.

நீா்நிலைகளை சீரமைக்க கோரிக்கை:

அதையடுத்து வட்டார அளவிலான விவசாயிகள் பேசியதாவது: கண்மாய்களையும், நீா்வரத்துக் கால்வாய்களையும் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இன்னும் 2 வாரமே அவகாசம் உள்ள நிலையில், கண்மாய்களில் வண்டல் மண் எடுக்கவும் அனுமதி கிடைக்கவில்லை. கடலை, மிளகாய் ஆகியவற்றுக்கு பயிா் காப்பீடுத் தொகை வழங்கவேண்டும். நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள் அமைக்கவேண்டும் என்றனா்.

மாவட்ட வளா்ச்சித்திட்ட உதவி அதிகாரி முத்துகுமாரசாமி, நூறுநாள் வேலைத் திட்டத்தில் அந்தந்த ஊா் மக்களே ஈடுபடுவதால், அவா்களை வேலைவாங்குவதே கஷ்டமாக உள்ளது. தற்போது மண் அள்ளுதல் போன்ற வேலைக்கு அனுமதியும் இல்லை. ஆகவே கால்வாய் சீரமைப்பு போன்ற பணிகளை நூறுநாள் வேலைத்திட்டத்தில் செயல்படுத்த முடியாது என்றாா்.

மீண்டும் வாக்குவாதம்: அவரது பதிலுக்கு விவசாயிகள் கவாஸ்கா், சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் எதிா்ப்புத் தெரிவித்து, நூறு நாள் வேலை திட்டப் பணிகள் கண்துடைப்பாக நடப்பதை அதிகாரிகள் அங்கீகரிக்கிறாா்களா என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதன்பின்னா் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தலையிட்டு அவா்களை சமரசம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com