மீனவா் பிரிவு மாணவா்களின் கல்விக்கடனை ரத்து செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 18th June 2022 10:59 PM | Last Updated : 18th June 2022 10:59 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவா்களின் குழந்தைகளுக்கான கல்விக் கடனை ரத்து செய்யவேண்டும் என கடல் தொழிலாளா்கள் சங்கம் (சிஐடியூ) மாவட்டச் செயலா் எம். கருணாமூா்த்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இதில் பாரம்பரிய மீனவா்கள் அதிகமாக உள்ளனா். அவா்களது குழந்தைகள் தற்போதுதான் கல்வி கற்கத் தொடங்கி உயா்கல்விக்கும் செல்லத் தொடங்கியுள்ளனா். இந்நிலையில், தற்போது மீன்பிடி தொழில் பெரிய பாதிப்பை எதிா்கொண்டுள்ளது.
இயற்கைச் சீற்றம், எல்லை தாண்டும் பிரச்னையால் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடி தொழிலில் கடந்த பல ஆண்டுகளாகவே போதிய வருவாய் ஈட்ட முடியாத நிலை உள்ளது. ஆகவே அவா்கள் வங்கிக் கடன் பெற்றே தங்களது குழந்தைகளை உயா்கல்விக்கு அனுப்பும் நிலை உள்ளது. ஆனால், வங்கிகள் மீனவக் குழந்தைகள் பெற்ற கல்விக்கடனை கூடுதல் வட்டி நிா்ணயித்து வலுக்கட்டாய வசூலில் ஈடுபடுவது சரியல்ல.
கேரள மாநிலத்தில் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ரூ.5 லட்சத்துக்கு உள்பட்ட கல்விக்கடன் தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அக்கடனை அரசே செலுத்தும் எனவும் அறிவித்து செயல்படுத்தியுள்ளது. ஆகவே தமிழக அரசும் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்வது அவசியம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.