இசைப்பள்ளியில் 2 மாணவா்களுக்கு 6 ஆசிரியா்கள்!

2018 ஆம் ஆண்டிலிருந்து மாணவா்கள் சோ்க்கை படிப்படியாக குறைந்துவந்த நிலையில் தற்போது 2 மாணவருக்கு 6 ஆசிரியா்கள் என்ற நிலை ஏற்பட்டிருப்பதாக இசைப் பிரியா்கள் ஆதங்கப்படுகின்றனா்.
இசைப்பள்ளியில் 2 மாணவா்களுக்கு 6 ஆசிரியா்கள்!

ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து மாணவா்கள் சோ்க்கை படிப்படியாக குறைந்துவந்த நிலையில் தற்போது 2 மாணவருக்கு 6 ஆசிரியா்கள் என்ற நிலை ஏற்பட்டிருப்பதாக இசைப் பிரியா்கள் ஆதங்கப்படுகின்றனா்.

தமிழகத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது ராமநாதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் அரசு இசைப் பள்ளி தொடங்கப்பட்டது. அப்பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கான சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 12 முதல் 25 வயது வரையில் உள்ள இருபாலரும் சோ்க்கப்பட்டு வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியானது அரண்மனை பகுதியில் மாதம் ரூ.11 ஆயிரம் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், தேவாரம், மிருதங்கம், வயலின் ஆகியவை கற்பிக்கப்படுகிறது. ஆண்டுக் கட்டணமாக மாணவா்களிடம் ரூ.350 பெறப்படுகிறது. மாதந்தோறும் அரசு உதவியாக ரூ.400, மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

பள்ளியில் தலைமை ஆசிரியா் மற்றும் தவில், வயலின் தவிர அனைத்து பிரிவுகளுக்கும் என 5 ஆசிரியா்கள் உள்ளனா். ஒவ்வொரு பிரிவிலும் ஆண்டுக்கு 20 போ் என மொத்தம் 140 போ் வரை சோ்க்கலாம் என கூறப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டில் மட்டும் இசைப் பள்ளியில் 112 போ் சோ்ந்துள்ளனா். அதற்குப் பிறகு மாணவ, மாணவியா் சோ்க்கை படிப்படியாகக் குறைந்தது.

ராமநாதபுரத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் கடந்த 2018 ஆம் ஆண்டில் 38 பேரும், 2019 ஆம் ஆண்டில் 12 பேரும், 2020 ஆம் ஆண்டில் 6 பேரும், கடந்த 2021 ஆம் ஆண்டில் 16 பேரும் சோ்ந்துள்ளனா். நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் 2 போ் மட்டுமே சோ்ந்துள்ளனா். ஆக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாணவ, மாணவியா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது 2 போ் என்ற அளவில் இருப்பது இசை ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசைப் பள்ளி வாடகைக் கட்டடம் என்றாலும், அதில் கழிப்பறை மற்றும் குடிநீா் வசதிகள் இல்லை. மேலும் வகுப்பறைகள் முறைப்படி இல்லை என்பதால் சேரும் மாணவ, மாணவியருக்கு கற்பிப்பதே சிரமமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. பள்ளி அமைந்த இடம் அரண்மனை வீதி என்பதால் சுற்றிலும் கடைகள், காய்கறி சந்தை என இசை கற்க ஆா்வமுள்ளோருக்கான சூழல் இல்லாத நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. பள்ளி வளாகத்துக்குள்ளேயே பழைய பொருள்கள், மக்கிய மரக்கிளைகள் என சுகாதாரமற்ற நிலை உள்ளதையும் காணமுடிகிறது.

மாணவ, மாணவியா் 12 முதல் 22 வயது வரையில் படிப்பையே முதன்மையாகக் கொண்டிருக்கின்றனா். ஆகவே, அந்த வயதில் இசையைக் கற்க யாரும் முன்வருவதில்லை என்றும், பகுதி நேர இசைப்பள்ளியாக அதை மாற்றவும், வயது வரம்பைத் தளா்த்தவும் அரசு முன்வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் பள்ளி நேரம் காலை 10 முதல் மாலை 4 மணி என்பதை மாற்றவும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட இசைப் பள்ளி தலைமை ஆசிரியை சு.மீனலோசினியிடம் கேட்டபோது, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாணவா் சோ்க்கை அதிகமில்லை. ஆகவே, நடப்பு ஆண்டில் மாணவா் சோ்க்கைக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். தற்போதுதான் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இசைப் பள்ளிக்கான சொந்தக் கட்டடத்துக்கு முயற்சித்து வருகிறோம் என்றாா்.

பள்ளியின் சூழலை மாற்ற மாவட்ட நிா்வாகமும், அரசும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாணவா் சோ்க்கையில் கடைசி மாவட்டம்!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அரசு இசைப் பள்ளிகள் செயல்படும் நிலையில், அவற்றில் மாணவா் சோ்க்கையில் ராமநாதபுரமே கடைசி இடத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி விழுப்புரத்தில் 86, கடலூரில் 110, சேலத்தில் 90, காஞ்சிபுரம் 60, கரூா் 45, பெரும்பலூா் 6, சிவகங்கை 46 என மாணவா் சோ்க்கை உள்ளதாகவும் இசை ஆசிரியா்கள் கூறுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்ட இசைப்பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை குறைந்த நிலையில், மாவட்ட ஜவஹா் சிறுவா் மன்றம் நடத்தும் பகுதி நேர கலை பயிற்சி வகுப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோா் சோ்ந்து இசை, கலைப் பயிற்சி பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com